Monday, April 20, 2009

இதற்காகவா பிறந்தோம்?



இப்படி வாழவா
எங்களைப் படைத்தாய் ??



இவற்றை எல்லாம்
பார்க்கவா எமக்கு கண்களைக்
கொடுத்தாய்??


எமது விதியில்
விடிவுகாலம் என்ற
அத்தியாயத்தை எழுத
மறந்து விட்டாயா??
இரக்கம் சிறிதும் இல்லாத
இறைவா!!!!!!!!!!!!!!!!!!!


Sunday, April 19, 2009

தமிழர்கள் பணயக் கைதிகளா பாதுகாப்பு வலயத்தில் ??

சர்வதேச சமூகத்தின் ஈழப்போர் சம்பந்தமான அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தை நாசூக்கான முறையில் பெரும்பாலும் அனைத்து அறிக்கைகளிலும் சமர்ப்பிக்கத் தவறவில்லை. வீட்டில் சிறு பிள்ளைகள் சண்டை பிடிக்கும்போது பெரியவர்கள் யார் மேல் பிழை இருந்தாலும் இருவரையும் கண்டிப்பது போன்றது அவர்களினது செயற்பாடு. உண்மையைத் தெரிந்து கொண்டும் அரசியல் நோக்கங்கள் கருதி அவ்வாறு தெரிவிப்பது எழுதப்படாத விதி.

ஆனால் சிலசில ஒரு பக்கச்சார்பான ஊடகங்களின் கதையைக் கேட்டுவிட்டு சில தமிழர்களும், பல தமிழ் பேசும் மக்களும் கதைப்பது வருத்தத்திற்குரியது. சிங்களவர் கதைப்பது அவர்களின் அறியாமை. எமது மக்கள் யதார்த்தத்தை புரியாதது வேதனைக்குரியது. சற்று சிந்தியுங்கள். இற்றைக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வலுக்கட்டாயத்தின் பேரில் குடியமர்த்தப்பட்டவர்களா? அவ்வாறு குடியமர்த்தப்பட்டோர் எனின் ஏன் அன்றே அவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரவில்லை?? எவ்வாறு வரமுடியும் என சந்தேகத்திற்குரியவர்கள் கேட்கலாம். மிகவும் குறுகிய கட்டுப்பாட்டு எல்லைகளைக் கொண்ட பிரதேசத்தில் இருந்தே மக்கள் வெளியேறுகின்றனர் எனின், ஏன் அன்றே அவர்கள் வெளியேறவில்லை??

எல்லைகளைக் கடக்கும் மக்களை, புலிகள் தமது படைகள் மூலம் தடுத்து வைத்திருக்கிர்ரார்கள் என்று கூறித்திரிவோரே சற்று யோசியுங்கள். புலிகள் செறிவாக உள்ள பிரதேசத்திலிருந்தே மக்கள் வெளியேறி வருகிறார்கள் ஏன் பாரிய கட்டுப்பாட்டு பிரதேசம் புலிகளிடம் இருந்தபோது ஐதாக அவர்களின் படையணிகள் நிலை கொண்டிருந்த காலத்தில் இலகுவாக வெளியேறி இருக்கலாமே??

மக்கள் இன்று வெளியேறுவது ஏன் எனில் விடுதலை புலிகளிடம் இராணுவ ரீதியாக மோதுவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் அப்பாவித் தமிழர்களை கொல்வதன் மூலம் திட்டமிட்ட தமிழின அழிப்பைச செய்வதால் எஞ்சியுள்ள தங்களின் ஓரிரு சொந்தங்களையும் காப்பாற்றிக் கொள்ளவே ஒழிய விடுதலைப் புலிகளை வெறுத்து அல்ல.

இவற்றினை உணராது நாக்கில் நரம்பில்லாதது போல் எம்மக்கள் பேசுவது இவனெல்லாம் தமிழனா என எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசாங்கம் தமிழின ஒழிப்பை திட்டமிட்டு நடாத்திக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணருங்கள்.

தமிழீழ விடுதலை இயக்கம் என்பது வேற்று இனம் என்பது போல் அரச ஊடகங்களின் கருத்து தவறானது என்று உங்களுக்கு தெரியாதா?? விடுதலை இயக்கம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்ப் பட்ட இயக்கம் என்பதை மனதில் கொண்டு வார்த்தைகளை வெளிவிடுங்கள்.

விடுதலைப் போராட்டத்தை வாழ்த்த வேண்டாம் வையாமலாவது இருங்கள் மாற்றுக்கருத்துடையோரே!!!!


Sunday, April 5, 2009

இறைவா நீ இருக்கிறாயா?

தர்மத்தின் பக்கம் கடவுள் இருப்பார் என்பது
சகல மதங்களினதும் கோட்பாடு.
அறத்தின் வழி நிற்போருக்கு சோதனைகள் இருக்கும்
கைவிடப் பட மாட்டார்கள் என்பது
ஒவ்வொரு சமயத்திலும் உள்ள வரலாற்று கதைகளின்
பிரதான உட்பொருள்.
ஈழத்தமிழர்கள் வாழ்வில் இவை யாவும்
பொய்யாகிப் போயின.
சோதனைக் காலம் என்பதற்கு வரையறை இல்லையா?
ஒரு தலைமுறை வாழ்க்கைக் காலம் சோதனை என்றால்,
நிம்மதியை அனுபவிப்பது எப்போது?
மதத்தால் வேறுபடாமல்
மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு
எம்மக்கள் போராடுவது
கடவுளே உனக்கு பிடிக்கவில்லையா?
இறைவனின் பெயரால் நாம் போராடவில்லை என
எம்மீது ஆத்திரமா?
சந்தேகம் வந்துவிட்டது பல ஆத்திகர்களுக்கு
இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்று ...................

Monday, March 23, 2009

தமிழீழம் உருவாகுவதை ஏன் சர்வதேசம் விரும்பவில்லை......??

இன்று வன்னியிலே தமிழ் மக்கள் அரச பயங்கரவாதத்தால் அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து, சொந்தங்களைத் தொலைத்து விட்டு உயிரைக் கையில் பிடித்தபடி பதுங்கு குழிகளில் அன்றாட சீவியத்தை ஓட்டுகின்றனர். அனைத்தும் அறிந்த சர்வதேச சமூகமோ பாரா முகமாய் அறிக்கைகளை மாத்திரம் விட்டபடி. அரசாங்கத்தின் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டிக்கின்றோம் என அறிக்கையை ஆரம்பிப்பது அத்தோடு விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதை எதிர்க்கின்றோம் என அறிக்கையை நிறைவு செய்வது சர்வதேச சமூகத்தின் வழக்கமாகிப் போனது கடந்த சில மாதங்களாக.

ஏன் இந்த நிலைப்பாடு...? ஏன் உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தமிழ் மக்கள் மீது எள்ளளவேனும் அக்கறை காட்டாது நடந்து கொள்கின்றன..???

இலங்கை அரசாங்கத்துக்கு துணை போவதால் ஏதாவது நன்மையை சர்வதேச சமூகம் பெற்றுக்கொள்ளுமா ....???

என்ற கேள்விகள் இன்று எம்மைத் துளைத்த வண்ணம் உள்ளன. ஏன் இந்த நிலைப்பாடு என ஆராயுமிடத்து..............

இலங்கையில் நடப்பது உள் நாட்டு யுத்தம் என்றாலும் பல நாடுகளின் சுய இலாபத்துக்காக நடத்தப்படுகின்ற பனிப்போராக இன்று வியாபித்து நிற்கின்றது.தெற்காசியாவில் உள்ள பலமான இரு நாடுகளும்(இந்தியா,பாகிஸ்தான்) சம்பந்தப் படுகின்றன. சீனாவின் கொள்கைகளை முன்னோடியாக கொண்டு செயற்பட்டு வரும் மகிந்தவின் அரசாங்கம் பல உடன்படிக்கைகளை செய்து அந் நாட்டிடமிருந்து உதவிகளைப் பெற்று வருகின்றது. இந்தியாவை கண்காணிக்க ஒரு தளமாக இலங்கையை பாவிக்கலாம் என்ற நப்பாசையில் பாகிஸ்தான் உதவிகளை வழங்குகிறது. எமது அயல் நாட்டில் அந்நிய சக்திகள் நுளைவது தமது பாதுகாப்புக்கு குந்தகம் என கருதி மற்றைய நாடுகளை விட அதிகமாக உதவிகளை வழங்குகிறது. ஒரு படி மேலே போய் இராணுவ ஆளணி உதவிகளையும் வழங்குகிறது. இந்தியாவோடு பல ஒப்பந்தங்களை கொண்ட அமெரிக்கா நேரடியாக தலையிடாது தலையிடுவதுபோல் கண்டன அறிக்கைகளை வெளிவிட்டு தன்னை நல்ல பிள்ளையாக வெளிக்காட்டிக் கொள்ள எத்தனிக்கின்றது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை விடயம் குறித்து ஆராயப் படுவதை பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 8 நாடுகள் ஆதரித்தன.7 நாடுகள் எதிர்த்தன. அமெரிக்கா,மெக்சிக்கோ ஆகிய நாடுகள் ஆதரித்திருந்தன. தீவிரவாததிற்கு எதிரான போர் என அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சிதைத்த காலத்துக்குள் சீனா தன்னை வெகுவாக முன்னேற்றி அமெரிக்கா இலங்கை விடயத்தில் தலையிட்டாலும் எதிராக நிற்க துணிந்து நிற்கிறது. அதாவது ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா சர்வதேச சமூகத்தின் குரல் என்ற போர்வையில் தலையிட சீனா சிறிதளவேனும் விரும்பவில்லை. அமெரிக்கா ஆதரிக்கின்றது என்பதற்காக ரஷ்யா எதிர்த்திருந்தது. இது வழமையான அமெரிக்கா-ரஷ்யா போட்டி. ஆயுதப்போராட்டத்தால் உரிமையைப் பெற்றுக் கொண்ட வியட்நாம் கூட அமெரிக்காவின் ஆதரவு நிலைப்பாட்டால் எதிர்ப்புக்கொள்கையை கடைப்பிடிக்கின்றது. அனைத்து நாடுகளும் தமது சுய இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே செயல் படுகின்றன.ஒரு பாரிய பனிப் போரே நடக்கின்றது இலங்கையை மையமாகக் கொண்டு. சர்வதேச சமூகத்தின் நோக்கம் சுயலாபமே என்றால் ஏன் அவை தமிழீழத்தை அங்கீகரித்து அதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றக் கூடாது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.அவ்விடயம் குறித்து நோக்கும்போது...............

எமது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் அட்டூழியங்களினாலும் அடக்குமுறைகளினாலும் சொல்லணாத்துயரங்களை அனுபவித்து எத்தனை முறை விழுந்தாலும் அத்தனை முறையும் எழுந்து நிற்கின்ற ஒரு மனவலிமை மிக்க இனம். இம் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் தலைவன் ஒருவனின் கீழ் குன்றாத சகல வலிமைகளையும் கொண்ட ஒரு மக்கள் போராட்ட இயக்கம். இராணுவ ரீதியிலும் சரி தொழில்நுட்ப ரீதியிலும் சரி இதர எந்த துறைகளிலும் இலங்கை அரசாங்கத்தைவிட எத்தனையோ படி உயர்ந்து நிற்கின்றார்கள். தமிழீழத்தை சர்வதேச சமூகம் ஆதரிப்பதால் எட்டப் படும் தன்னாட்சியில் தமிழீழத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாபெரும் வளர்ச்சியாக இருக்கும். அரசாங்கத்தின் இன அழிப்பால் தமிழ் மக்களுக்கு தமிழீழம் மீதான பற்று அளவுக்கதிகமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்நிய நாட்டைச் சார்ந்திராத பொருளாதாரக் கொள்கைகள்,மக்களின் பரிபூரண ஆதரவு என மிகவும் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்து ஒரு வணங்கா மண்ணாக விரைவில் தோற்றம் பெற்று தெற்காசியாவில் ஒரு பிராந்திய வல்லரசாக மாறிவிடும் என இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கும் இந்தியா முதல் சீனா வரை அறியும். யுத்த காலத்திலேயே எம்மவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் நாட்டின் ஒவ்வொரு விடயத்தையும் திறமையாக பயன்படுத்தும் அறிவுத்திறன் பற்றியும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

இவ்வாறான ஒரு தமிழீழத்தை அங்கீகரித்தால் அந்த மண் இலங்கையைப் போல் தமது தாளத்துக்கு தலையாட்டாது என சம்மந்தப்படுகின்ற சர்வதேச சமூகம் அறியும். இதுவே சர்வதேசத்தில் பெரும்பான்மையான நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்காமைக்குரிய காரணமாகும்.

"நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - ஒன்பது கோடி உயிர்களைக் கொண்ட - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம்." என வழுதி அவர்கள் கூறியதை மனதில் வைத்து மக்கள் போராட்டங்களை புலம் பெயர் தேசங்களிலே சளைக்காது முன்னெடுத்துச் செல்லும்போது சுயநல போக்கான வெளிநாடுகளின் முகத்திரை கிழிக்கப்பட்டு தமிழீழக் கனி விரைவில் பறிக்கப்படலாம்!